மீனாட்சி அரசாளும் மதுரை அன்று
****மீன்கொடியோன் தலைநகரா யிருந்த வூராம் !
தேனான வைகைநதி பாயு மூராம்
***தெய்வீக சிந்தனையை வளர்க்கு மூராம் !
மேனாட்டார் விழியுயர்த்தி வியந்து நோக்கும்
****மேன்மைமிகு கலைகளிலே விஞ்சு மூராம் !
நான்மாடக் கூடலெனப் போற்றப் பெற்ற
***நற்றவத்தோர் வாழ்ந்ததிந்த ஊரின் பேறாம் !
பேறுகளும் மிகுந்தவிந்த மதுரை மண்ணே
***பிறைசூடி விளையாடல் நிகழ்ந்த வூராம் !
நீறுபூசி சுந்தரேசர் மீனாள் கூடி
****நெஞ்சினிக்கக் குடிகொண்ட ஆல வாயாம் !
நாறுமலர் மல்லிகையே பெருமை சொல்லும்
***நற்றமிழின் மண்வாசம் சொக்க வைக்கும் !
வேறுபல மகிமைகளும் சொல்ல வந்தேன்
***விருத்தங்கள் வாசிக்கத் தெரியும் சேதி !
சேதிகேளீர்! கடம்பமரம் மிகுந்த ஊராம்
***தேன்தமிழைச் சங்கங்கள் வளர்த்த ஊராம் !
வீதிகளும் தமிழ்மாதப் பெயரால் மின்னும்
***வெள்ளிச்ச பையிலீசன் காலை மாற்றிப்
பாதிமதி சூடியாடும் அழகு கோலம்
***பார்ப்போரைப் பரவசமும் கொள்ளச் செய்யும் !
நீதிநெறி வழுவாமங் கம்மா ராணி
***நெஞ்சத்தில் வீரத்தோ டாண்ட ஊராம் !
ஊரினிலே மீனாட்சி யம்மன் கோயில்
***உலகத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்
பாரிலுயர் அதிசயமாய்ப் பார்க்கப் பட்டுப்
***பழம்பெருமை பேசிநிற்கும் எழிலின் உச்சம் !
நீரிருந்தும் மீனினமே குளத்தில் இல்லை
***நிசமிங்கே பொற்றாம ரைக்கு ளத்தில் !
பேரெழிலாய் ஆயிரங்கால் மண்ட பத்தில்
***பேர்சொல்லும் கண்காட்சி உள்ள திங்கே !
இங்குள்ள நாயக்கர் அரங்கந் தன்னில்
***எழிலான ஓவியங்கள் உள்ளம் அள்ளும் !
மங்காத அழகோடு பெரிய தூண்கள்
***மன்னவனின் கலைத்திறனைப் போற்றிச் சொல்லும் !
சங்கீத இசைத்தூண்கள் சந்தம் கொஞ்சும்
***சத்தத்தில் செவிகளிலே செந்தேன் பாயும் !
சிங்கார மாயொளியு மொலியு மிங்கே
***சிலிர்க்கவைக்கும் காட்சிகளும் நடக்கும் நித்தம் !.
நடைபெறும்வி ழாக்களுக்குப் பஞ்ச மில்லை
***நகரத்தின் விழாக்கோலம் அன்பின் எல்லை !
தடையின்றி நடந்தேறும் ஜல்லிக் கட்டும்
***தமிழினத்தின் வீரத்தை எடுத்துக் காட்டும் !
மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம்
***மகிழ்வுடனே அதைக்காண முட்டி மோதும் !
சடைத்திடாமல் விருந்தோம்பும் குணமே சொத்தாய்த்
***தமிழ்மாந்தர் மனத்தூறும் அன்பே முத்தாய் !
முத்தாக ஒளிசிந்தும் மதுரை தன்னில்
***முப்போதும் ஆன்மீக வாசம் வீசும் !
சித்திரையில் திருவிழாவும் பேத மின்றிச்
***சீரோடும் சிறப்போடும் நடக்கும் பாங்காய் !
எத்திக்கும் பக்திவெள்ளம் பெருகிப் பாய
***இருசமய ஒற்றுமையில் இன்பம் பொங்கும் !
வித்தாகி நல்லிணக்க மியல்பாய்ப் பூக்கும்
***வீண்வாதம் சங்கடங்கள் மறைந்தே செல்லும் !
செல்லுகின்ற சாலையெல்லாம் மக்கள் கூடிச்
***சீர்மிகுந்த அன்னைமணக் கோலம் கண்டு
எல்லையில்லா ஆனந்த மெங்கும் பொங்க
***இறைவியின் திருமணத்தில் பங்கு கொள்வர் !
பல்லாயி ரம்பெண்கள் தாலி நூலைப்
***பக்தியுடன் தாமாக மாற்றிக் கொள்ளப்
பல்லக்கில் சொக்கருட னிணைந்தே மீனாள்
***பவனிவரும் அழகினிலே பூக்கும் கண்கள் !
கள்ளழகர் வைகையிலே இறங்கும் கோலம்
***காண்பதற்கே விழிகளொரு கோடி வேண்டும் !
உள்ளமெலாம் பக்திரசம் நிறைந்து மின்னும்
***ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாம் இஃதே !
வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் நெஞ்சில்
***வித்தியாச மேதுமின்றிப் பகைமை நீங்கும் !
கள்ளமனம் கரைந்தங்குச் சுரக்கும் நேயம்
***கனிந்துருகிப் பரவசத்தில் உள்ளம் பூக்கும் !
பூப்போன்று மணம்வீசும் விருத்தம் பத்தும்
***புனிதமான மதுரைநகர் புகழைப் பாடும் !
கூப்பிட்ட வுடனன்னை ஓடி வந்தே
***கொஞ்சுமொழி யால்வருடி உள்ளம் வெல்வாள் !
தோப்புக்குள் இளங்காற்றாய்க் கருணை யோடு
***சுகராகம் மீட்டிடுவாள் மதுரை தன்னில் !
மாப்பிள்ளை விநாயகரே உமக்கு நன்றி
***மதுரைதனை எழுதவைத்தீர் தடங்க லின்றி !
Comments