top of page

எனக்கு உதவி இயக்குனர் என்று பெயர்-கதை.

Writer's picture: tamilpettai tamilpettai

“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.


“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் பல தேசிய,மற்றும் ஆஸ்கார் விருதுகளை வாங்கப் போகும் பரத்குமார்.


உள்ளே வந்து சோபாவின் குஷனில் புதைந்த வி.எம்.வி, அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டார்.டைரக்டரின் வருகைக்காக காத்திருக்கும் எதிர் சோபாவையும்,அதற்கு முன் இருந்த டீப்பாய்., அதன்மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த உயர்ரக மதுபானங்கள், நறுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கள்,மற்றும் இத்யாதிகளை பார்த்தார். கண்களுக்குள் ஒரு அங்கலாய்ப்பு மின்னி மறைந்தது. அதனைக்கண்டு கொள்ளதவர் போல நிமிர்ந்தவர், உதவி இயக்குனர்களான பரத்குமாரையும்,தியாகுவையும்,கார்த்திக்கையும் மையமாகப் பார்த்தார். “உக்காருங்கப்பா..ஏன் நிக்கிறீங்க..புரொட்யூசர்,டெக்னீசியன் எல்லாம் சூட்டிங்லேதான்., இங்க நாம ப்ரீயா இருப்போமே..!” குரலில் தெரிந்த நட்பை மதித்து,அருகிலிருந்த சாதாரண நாற்காலிகளை மூவரும் ஆக்ரமித்தார்கள்.


“ஆமா..கதாநாயகன் முதல்பாதிலே வில்லனா இருக்கான்.அப்ப அவன் வந்து கதாநாயகியைக் கற்பழிக்கும் போது,அந்த இடத்திலே ஏதோ புதுசா ஒரு சீன் வெக்கலாம்.. சீன் புடிச்சாச்சுனு டைரக்டர் சொல்லியிருந்தாரே..அந்த சீனைக் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.!”


கார்த்திக்கும்,தியாகுவும் சற்றே தயங்கி நிற்க, பரத் வாயைத் திறந்தான் “சார்..அது வந்து..டைரக்டர் வந்துதான் விளக்கமாச் சொல்வாரு சார்..”,


உதவி இயக்குனர்கள் எப்போதுமே,படத்தின் இயக்குனர் எண்ணப்படிதான் இயங்குவார்கள்.அவருடைய அனுமதியின்றி,படத்தின் கதாநாயகன்,நாயகி என்று யாராயிருந்தாலும் ஒரு சீனைக்கூட சொல்லக்கூடாது.இது எழுதப்படாத விதி.மீறினால்,அவனை வெளியேற்ற ஆயிரம் காரணங்களும் உண்டு.அதற்குப்பின் இன்னொரு இயக்குனரிடம் உதவி இயக்குனர் அந்தஸ்தைப் பெறுவதற்குள் அவனின் ஆயுள் முடிந்துவிடும் என்பது முதல்நிலை உதவி இயக்குனரான பரத்துக்கு தெரியும்.


“அது சரி தம்பி..அவரு வர்ற வரைக்கும் ஏதாவது உருப்படியாப் பேசிட்டு இருக்கலாமேன்னுதான் கேட்டேன்..”என்றபடியே கார்த்திக்கின் தோளில் கைபோட்டுக் கொண்டார். ஒரு தயாரிப்பாளர்,சாதாரண உதவி இயக்குனரின் தோளிலாவது கை போடுவதாவது..,கார்த்திக்கின் மனதில் அதுவரை தயாரிப்பாளர்களைக் குறித்து வரைந்து வைத்திருந்த சித்திரம் பொசுக் கென அழிந்துவிட்டது. ‘இதோ இங்கே நடக்கிறதே..மற்ற யூனிட் ஆட்களெல்லாம் இதை அறிந்தால்,அவ்வளவுதான் அவர்கள் வயிற்றில் நெருப்பு பற்றிக் கொள்ளும். “டேய்..உன்னோட படத்துக்கு ஒரு நல்ல ப்ரொட்யூசரை இப்பவே பிக்கப் பண்ணிகிட்டே போல..” அங்கலாய்ப்பும் தெறிக்கும். கார்த்திக்கின் மனசுக்குள் விநாடிகளின் அளவே கொண்ட சில குறும்படங்கள் ஓடி மறைந்தன.அவன் தன்னிலை மறந்தான்.“சார்..அந்த இடத்திலே.. ஒரு புலி அப்படியே,ஒரு மானை வேட்டையாடுற சீனை கம்பேரிசன் ஷாட்டா வெக்கப் போறோம் சார்..” பரத்தின் கண் ஜாடையைக் கவனத்தில் கொள்ளாமலேயே போட்டுடைத்தான்.


அவ்வளவுதான்..வி.எம்.வி.யின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “அட..என்னப்பா நீங்க..இதத்தான் எம்.ஜி.ஆர்,சிவாஜி காலத்திலேருந்தே ஜனங்க பாத்துகிட்டு இருக்காங்க..இதுலே என்ன புதுசா இருக்கு..!”


பரத்குமாருக்குப் புரிந்துபோனது.ப்ரொட்யூசருக்கு இந்த சீன் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.இந்த இடத்தில் டைரக்டரின் கற்பனைத் திறனை உயர்த்திப் பிடிக்கவில்லையென்றால்,உதவி இயக்குனர் என்பதற்கே லாயக்கில்லாதவர்களாகப் போய் விடுவோம்.பரத் குமார் அவசரமாகக் குறுக்கிட்டான்.. “சார்,அவன் சொல்ற மாதிரியில்லே சார். அந்த மாதிரி ஐடியாலே விஷ{வலா கொஞ்சம் ஹைரேஞ்சா நம்ம டைரக்டர் திங்க் பண்ணி வெச்சுருக்கார் சார். கொஞ்சம் கிராபிக்ஸ் ஷாட்டெல்லாம் மிக்ஸ் பண்ணி,ரொம்ப வித்தியாசமா..அதாவது ஹாலிவுட் டைப்லே, ஆனா நம்ம ரியாலிட்டிலே, ரொம்ப நேட்டிவிட்டியாப் பண்ணப்போறார் சார்..” பத்துவருட அனுபவமுள்ள பரத்துக்கு,யாரை எப்படி குழப்புவது என்று தெளிவாகத் தெரியும்.வெங்காய சாகுபடி குறித்து மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்த வி.எம்.வி.க்கு எப்போதுமே சினிமா குறித்த டெக்னிக்கலான வார்த்தைகள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. வி.எம்.வி.யிடம், பரத் பதில் சொன்ன வேகத்தைப் பார்த்தபோதுதான்,தான் செய்த தவறு கார்த்திக்கிற்கு உரைத்தது.‘அடடா..நாம் அமைதியாக இருந்திருக்க வேண்டும்’.


வி.எம்.வி.மிரள்வது இப்போது துல்லியமாகத் தெரிந்தது.“அதில்லே தம்பி..எப்படிப் பாத்தாலும்,அந்தக் கருத்து பழசுதானே..!” கோடிகளில் செய்யப் போகும் முதலீடு கவலையாய் வெளிப்பட்டது.


“அதுவொன்னும் பெரிய பிரச்சினையில்லே சார்.நம்ம டைரக்டர்கிட்டே சொன்னா நிமிஷத்திலே வேற ஒரு சூப்பர் சீனை வெச்சுருவார் சார்..”


“சரி..சரி..வேற சீனையே ரெடி பண்ணச் சொல்லு..”


“அப்படியே பண்ணிரலாம் சார்..” இன்னும் பத்து நிமிஷத்தில் இயக்குனர் வந்துவிடுவார். “சார்..நீங்க பேசிகிட்டு இருங்க..நான் கீழே கடைவரைக்கும் போயிட்டு வந்துர்றேன்..”என்று அவசரமாகச் சொல்லிவிட்டு வெளியேறிய பரத்குமார்,லிப்ட்டு;க்கு கூட காத்திராமல் தடதடவென படிக்கட்டுகளில் இறங்கி,அந்த ஹோட்டலின் வரவேற்பறைக்கு ஓடிவந்து அமர்ந்து கொண்டான்.


ஹோட்டலின் போர்டிகோவில் வழுக்கிக் கொண்டுவந்து நின்ற வெள்ளை இன்னோவாவிலிருந்து,டைரக்டர் டி.ஜே..என திரையுலகம் சமீபகாலமாகக் கொண்டாடிவரும் தனஞ்செயன் இறங்கி உள்ளே நுழைந்தார்.தொடர்ச்சியாய் அவரது இயக்கத்தில்

வெளிவந்த மூன்று படங்களும் கன்னாபின்னா வென்று வசூலைக் குவித்தது.அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த நல்ல கதைகளே காரணம் என்றும்,என்னதான் நல்ல கதையென்றாலும் அதை சூப்பரா ப்ரெசண்ட் பண்ற மாதிரி ஸ்க்ரீன் ப்ளே வேணுமில்லே..அதுலே டி.ஜே வை அடிச்சுக்க முடியாது… என்று, சினிமா இண்டஸ்ட்ரி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ..தயாரிப்பாளர்களின் குட்புக்கில் டி.ஜே.க்குதான் இப்போது முதலிடம்.


அவரது நடையில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த மதமதப்பு..பரத்குமார் அவருக்கு முன்னே சென்று குட்மார்னிங் சார்..என்று பவ்யமாக வணங்கினான்.


“ஹே..மேன்..என்ன இங்க நிக்கிறே..?”


“இல்ல சார்.., மேலே ப்ரொட்யூசர் வந்து வெயிட் பண்றார்..”


“சரி..அதுக்கென்ன..?, நீயும் ரூமிலேயே வெய்ட் பண்ணிருக்கலாமே..,


“இல்ல சார் அவரு வந்து கொஞ்சம் மூட்அவுட்டா இருக்காரு..!”


தொடர்ந்து மூன்று வெற்றிகளைக் குவித்திருந்த டிஜே, வி.எம்.வி.க்கு படம் பண்ணிக் கொடுக்க ஒப்புக் கொண்டதற்கு காரணமே,இரட்டிப்பு மடங்கு சம்பளம் பேசியிருப்பதுதான்.இந்தப் படம் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், இந்த சம்பளம் இப்போதைக்கு நிரந்தரமாகிவிடும்.அதுக்கப்புறம்..தனது சம்பள விஷயத்தை தயாரிப்பாளர்களிடமே ஏலத்திற்கு விட்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த டி.ஜே விற்கு..வயிற்றைப் பிரட்டியது. அப்படியே நின்று விட்டார்.குரலில் அதீத பதற்றம்

“மூட்அவுட்டா.டேய்..டேய்..என்னடா ஆச்சு...?”


ப்ரொட்யூசரிடம் வாய் தவறி கார்த்திக் உளறிவிட்டதை எடுத்துச் சொன்ன பரத், “அவனைக் கோவிச்சுக்காதீங்க சார்..நல்ல பையன் சார்.ப்ளீஸ் சார்..” பரத் கெஞ்சிய பின்பும் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.


“சார்..ப்ளீஸ் சார்..நீங்க குடுத்த மூணு சக்சஸ் படத்துக்கும் அவன் நம்மகூட வொர்க் பண்ணிருக்கான் சார்..” டிஜே..விற்கு கருக் கென்றது. ‘அவன் வந்த ராசியாலக் கூட இருக்கலாமோ..அதெப்படி ஒரு டைரக்டராலே ஜெயிக்க முடியாத படம்,ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராலே ஜெயிச்சிடுமா..?. ஒருவேளை அப்படியும் இருக்குமோ.. எதுக்கு ரிஸ்க் இருந்து தொலையட்டும்...’ ஆனாலும் வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள அவருக்கு மனதில்லை.


“அவன் நம்மகிட்டே வந்தப்புறம்தான் நமக்கு படமெல்லாம் சக்சஸ் ஆச்சுன்னு சொல்றியாடா..?”


“அய்யய்யோ..நான் அப்படியெல்லாம் சொல்வேனா சார். டைரக்டர் டி.ஜே..ங்கிற பேருக்காகத்தான் சார் படமெல்லாம் வசூலை அள்ளிக் குவிக்குது. நான் சொன்னது உங்களாலே பொழச்சுகிட்டே ஆயிரம்பேருலே அவனும் ஒருத்தனா இருந்துட்டுப் போகட்டுமேன்னுதான் சார்..!”


“ஓ..நீ அப்படி சொல்றீயா..? சரி தொலையட்டும்..இப்ப என்ன வேற சீன் புடிக்கணும்.என்ன பண்ணலாம்னு சொல்லு..”


பரத்துக்குத் தெரியும்.அடுத்து மனுஷன் இங்கேதான் வந்து நிற்பாரென்று..! அவன் ஏற்கனவே மண்டையைக் குழப்பி யோசித்து வைத்திருந்த இன்னொரு சீனை சொல்லத் தொடங்கினான். “அதாவது சார், வில்லன் நாயகியைக் கற்பழிக்கப் பாயுறதைக் காட்டுறோம்..அப்புறம்,வேர்ல்டு கப்புலே ஆஸ்திரேலியா டீம் ஸ்மித் அடுத்தடுத்து சிக்சர் அடிக்கிற மாதிரி..,மாத்திமாத்திக் காட்டுறோம்..இப்பத்தான் வேர்ல்டு கப் போட்டி முடிஞ்சிருக்கறதாலே..இது நல்லா ரீச் ஆகும்ணு தோணுது சார்..அப்புறம்.ரொம்ப ரீசண்ட் டைமிங்காவும் இருக்கும் சார்..”


டிஜேவிற்கு,அடி வயிற்றைப் புரட்டிப்போட்டது.எப்படி இந்தப் பசங்க இப்படியெல்லாம் யோசிக்கிறானுக..நமக்கு அப்டியெல்லாம் தோணவே மாட்டேங்குதே..! இருந்தாலும் இவன் சொல்றதை அப்படியே ஒத்துக்கிறதா..?’


“ஸ்மித் அடிக்கிற மாதிரிதான் காட்டணுமா..ஏன் நம்ம தோணி அடிக்கிற மாதிரி காட்டலாமே..”


அது வந்து சார்,இந்தியா டீம் ஜெயிச்சிருந்தா..நல்லா இருக்கும் சார்.மீறி நாம காட்டுனம்னா..அந்த சீனோட எபெக்ட் போயி இந்தியா தோத்ததுதான் எல்லாருக்கும் மனசுக்குள்ளே வந்துட்டுப் போகும் சார்.அது நெகடிவ் ஆஸ்பெக்ட்டா இருக்கும்.அப்ப சீன்லே ஆடியன்ஸ{க்கு இன்வால்வ்மெண்ட் கம்மியாயிரும்..”


‘பாவி..பாவி..எப்படியெல்லாம் யோசிக்கிறானுக..’ “சரி..பரத் அப்டியே வெச்சிரலாம்..வா..ரூமுக்குப் போவோம்..” அவர் முன்னால் செல்ல,ஆட்டுக்குட்டி போல பின்னாலேயே சென்ற பரத்,அறைக்கதவை நெருங்கும்போது,அவரைக் கடந்து முன்னதாக ஓடிப்போய் அறைக்கதவைத் தட்டினான்.கதவைத் திறந்தவுடன் பாய்ந்து உள்ளே சென்றவன் டைரக்டர் வராரு…என்று ப்ரொட்யூசரைப் பார்த்தவாவறே பொதுவில் சொல்ல,பரத் கொடுத்த இந்த அலப்பறையில் பயந்துபோன ப்ரொட்யூசர் மின்னல் வேகத்தில் எழுந்துநின்று கொண்டார்.


அமர்க்களமாய் உள்ளே நுழைந்த டி.ஜே.,வி.எம்.வி.யின் வணக்கத்தை ஒரு தலையாட்டலில் அங்கீகரித்தபடி,குஷனின் புதைந்து கொண்டார். “சாரி..கொஞ்சம் லேட்டாயிடுச்சுன்னு நினைக்குறேன்..” டிஜே.வின் குரல்,வருத்தமான பாவனையில் இல்லாமல்,யந்திரத்தனமாய் இருந்தது.


“சே..சே..அதெல்லாமில்லே..நானும்..இப்பத்தான் உள்ளே வந்தேன்..!” இப்பத்தான் ; என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்திருந்தார் வி.எம்.வி.


எழுதி வைத்தபடி,அங்கேயொரு காட்சி நடித்துக் காட்டப்படுவது போலத் தோன்றியது பரத்துக்கு. சினிமாத்துறையில் இதையெல்லாம் தவிர்க்கவும் முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும்.


“அப்புறம்.. சொல்லுங்க சார்..!” டி.ஜே மேற்கொண்டு பேச்சைத் தொடர்வதற்காக,வி.எம்.வியைப் பார்த்துக் கொண்டே,தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை நோக்கிக் கையை நீட்டினார்.டீப்பாயின் மீதிருந்த ஃபாரின் சிகரெட் பாக்கெட்டை பாய்ந்து எடுத்த கார்த்திக்,அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி,லைட்டரோடு சேர்த்து டி.ஜே.வின் கையில் வைத்தான்.அவனது கை நடுங்கிக்கொண்டிருப்பது டி.ஜே.விற்குத் துல்லியமாகத் தெரிந்தது.அந்த நொடியில் டி.ஜே. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அவரின் யந்திரப்புன்னகை சில மில்லிமீட்டர்கள் அகலமாகி உயிர்ப்புடன் விரிந்தது.அந்த விரிவில் அவருடைய ஈகோ அடைந்த திருப்தியின் அளவு தெரிந்தது.


ஒண்ணுமில்லே தம்பி,ஸ்டோரி டிஸ்கசனெல்லாம் எப்டிப் போயிட்டு இருக்கு..? வேறு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டுப் போலாம்னு..,அதுவுமில்லாம என்னடா ப்ரொட்யூசரு, ஸ்டார் ஓட்டல்லே,ஏசி ரூமைப் போட்டுக் கொடுத்துட்டு,அவரு பாட்டுக்குப் போயிடடாரே..ன்னு நீங்க நினைச்சுக்கக் கூடாதில்லையா..? அதான் ஒரு எட்டுப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்..!” இதில் என்ன ஹாஸ்யம் இருந்தது என்று யாருக்கும் புரியவில்லை..ஆனாலும், வி.எம்.வி..ஹஹ்ஹா.. ஹஹ்ஹா..என்று சிரித்துக் கொண்டார்.வேறு வழியில்லாமல்,மற்றவர்களும் லேசாய் சிரித்து வைத்தனர்.


“தம்பி,வில்லன் வந்து நாயகியைக் கற்பழிக்க வர்றான்..ங்கிற வரை அன்னைக்கு கதை சொன்னீங்க..அந்த இடத்துக்கு புதுசா ஒரு சீன் புடிக்கணும்னு நான் உள்ளே வரும்போது பசங்க பேசிகிட்டு இருந்தாங்க..,” வி.எம்.வி சொல்லச்சொல்ல,நடுங்கிய கார்த்திக் அபயம்வேண்டி பரத்தைப் பார்க்க,அவன் தைரியமாயிரு என்பது போல கண்ஜாடை காட்டும்போதே,“நான் இதுபத்தி அவங்ககிட்டே ஒண்ணும் கேக்கலை.நீங்க வந்தா எனக்கு சொல்லமயாப் போறீங்க..ன்னு பேசாம இருந்துட்டேன்..” என்று வி.எம்.வி முடித்தபோதுதான்,கார்த்திக்கிற்கு போன உயிர் திரும்பி வந்தது.


டி.ஜே.,லேசாய் சிரித்துக் கொண்டே பரத்தைப் பார்க்க,அவனும் பதிலுக்கு சிரித்தான். சொல்லலாம் சார்..என்பது போல அவனின் தலையும் ஆடிக் கொண்டிருந்தது.


அதற்கு அடுத்து வந்த சிலநிமிடங்களில்,டிஜே ‘எடுத்துவிட்ட’ பரத் சொல்லியிருந்த சீனை சொல்லிமுடிக்க,பரத் படுவேகமாக அங்கீகரித்துக் கை தட்டினான். சார்..சூப்பர் சார்..இப்பத்து ட்ரெண்டிங்குக்கு தகுந்தமாதிரி சூப்பரா இருக்கு சார்..” இன்னும் அவன் கைத்தட்டலை நிறுத்தவில்லை.அதுவரை தேமே என்று நின்று கொண்டிருந்த கார்த்திக்கும்,தியாகுவும் இப்போது கைதட்டலில் இணைந்து கொண்டனர்.


‘ஆஸ்திரேலியா,ஸ்மித்..ட்ரெண்டிங்..’,இதெல்லாம் சட்டென்று வி.எம்.விக்கு புரியவில்லை என்றாலும்,இப்பத்து பசங்களுக்கு பிடித்து அவர்கள் கைதட்டிப் பாராட்டுகின்றார்கள் என்றால்,அதில் ஏதோ விஷயமிருக்கிறது என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது.இப்போது அவரும் கைதட்டலில் இணைந்து கொண்டார். “ம்;.ம்; நல்லாருக்கு தம்பி..,அப்படியே வெச்சிடுங்க..!”


டிஜே இப்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.தான் ஒரே டேக்கில் சொன்ன சீனை,மறுபேச்சில்லாமல் ப்ரொட்யூசரை ஒத்துக் கொள்ளவைத்த கர்வமும் கூடவே நிமிர்ந்து நின்று கொண்டது.


அதற்குப் பின்வந்த நிமிடங்கள் மார்க்கெட்,திருட்டு விசிடி,நடிகர் சங்கப் பிரச்சினை,தயாரிப்பாளர் சங்கம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள்..என அவர்களுக்கிடையே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்,நமது முதலீட்டையும், லாபத்தையும் எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதற்கான தேடலாகவும் அந்தப் பேச்சுக்கள் இருந்தது.காhர்த்திக்கும் தியாகுவும் தேமே..என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.


பரத்தும் அங்கே நின்று கொண்டிருந்தாலும்,அவனது எண்ணம் மட்டும் வேறு எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டிருந்தது.


லிப்ஸ்டிக் போட்டதைக் குறித்த கவலையின்றி,கம்பெனி செலவில் வரும் டிபனையும்,குளிர்பானத்தையும் சப்புக் கொட்டிக் குடிக்கும் கதாநாயகியின் உதடுகளின் சாயம் குறித்த கவலைகூட அவனைச் சேர்ந்தது.எடுத்து முடித்த காட்சிகளை ரஷ் பார்க்கும்போது உதட்டுச் சாயத்தின் நிறக்குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் திட்டு வாங்குவதும் அவனே.


முன்னனிக் கதாநாயகி,தங்கள் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கே,இவர்கள் எப்போதும் தன்னிடம் அடக்கமாய் நடந்து கொள்ளவேண்டும் என்ற கர்வத்திலேயே திளைக்கும் கதாநாயகி,தவறான ஒரு செய்கை அல்லது ஒரு பார்வையால்கூட அவமானப்பட்டு விட்டோம்..என்று உணராமல் இருக்க வேண்டும்.ஒரு வேளை அப்படி அவள் மனதிற்குப் பட்டுவிட்டால்.., அவ்வளவுதான்.., அசிஸ்டெண்ட் டைரக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று இயக்குனர்,தயாரிப்பாளர் வரை புகார் பறக்கும்.அப்புறம் தனது கனவுகளையெல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு,சொந்த கிராமத்திற்கே கிளம்ப வேண்டியதுதான்.பல் பிடுங்காத நல்ல பாம்பை கையில் பிடித்திருக்கும் லாவகம்; எப்போதும் வேண்டும்.


வசன உச்சரிப்பில் பிழை செய்யும் நாயகனின் தவறு எப்போதும்,சரியாகச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்று உதவி இயக்குனரின் தலையில்தான் குற்றச்சாட்டாய் விடியும்.லைம் லைட்டில் இருக்கும் கதாநாயகர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்பது எழுதப்படாத சினிமா இலக்கணம். அதன்படி,அங்கு நிகழ்ந்த தவறுக்கும்,அதற்கான தண்டனைக்கும் உதவி இயக்குனர்கள்தானே பொறுப்பேற்க வேண்டும்.?


“சே..என்னடா பிழைப்பு இது..விட்டுவிட்டு ஓடிவிடலாம்..”என்று கூட பலநேரங்களில் தோன்றியிருக்கிறது.


ஆனால்,எந்த சினிமாவிற்குப் போனாலும், “இந்த சீன் இப்படியெடுத்ததுக்கு பதிலா,இப்படி எடுத்திருக்கலாம்..” என்று அவன் சொல்லும்போதெல்லாம்..“நீ எப்படா சாதிப்பே..?” என்று ஆயிரம் கேள்விகளை ஒரே கேள்வியாக்கிக் கேட்கும் காதலி புவனாவுக்கு இதுவரை உருப்படியாய் பதில் சொல்ல முடியவில்லை.


“இந்தக்கருமம் புடிச்ச வேலையை வுட்டுட்டு வந்து பொழைக்கிற வழியப் பாருடா..! நம்ம காட்டுலே பண்ணையம் பாக்கலேன்னாலும் பரவாயில்லே..! கடனை வாங்கியாச்சும் ஏதாவது கடை வெச்சுத் தாரேன். உங்கூடப் படிச்சவனெல்லாம் ஏதோவொரு தொழிலு,கல்யாணம் குழந்தைகுட்டின்னு சந்தோசமா இருக்கான்.நீ மட்டும் ஏண்டா..சினிமா சினிமான்னு சீரழியுறே..?” அப்பாவின் ஆத்திரமும்,அங்கலாய்ப்பும் பொங்கும் கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடிந்ததில்லை.


“அப்பா சொல்றதை இப்பவாவது கேளு சாமி..!” என்று,வழியும் அம்மாவின் கண்ணீருக்கும் அவன் எப்போதும் பதில் சொன்னதில்லை.


சொந்தவீட்டிலேயே இப்படியென்றால்,உறவினர்கள் மத்தியில் கேட்கவா வேண்டும்.? “இதெல்லாம் எங்கே உருப்படப்போகுது..?” என்று ஒரு கல்யாணவீட்டில் தன் காதுபடப் பேசியதைக் கேட்டதிலிருந்து,ஊரிலிருந்து வருகின்ற எந்த விசேஷ அழைப்புகளுக்கும் அவன் செல்வதில்லை.


கல்லூரிக் காலம் முதல் கனவுகளை வளர்த்துக் கொண்டு,கடந்த பத்தாண்டுகளாய் அங்குலம் அங்குலமாய் முன்னேறி, ட்ராலி தள்ளுவதில் துவங்கிய பயணம் டி.ஜே.விற்கு அசிஸ்டெண்ட் என,இதுவரை வந்துவிட்டோம்.தனக்கென்று ஒரு அடையாளத்தைக் கூட சம்பாதித்துக் கொண்டாயிற்று.இப்போது பார்த்து விலகிச் செல்வது சரிதானா..?


வாய்ப்புகள் கைக்கெட்டும் தூரத்தில் வந்து,சில தவறிப்போகத்தான் செய்கிறது.அது நிரந்தரமா என்ன..? தன்னைக் கேலிப் பொருளாய் பார்க்கின்ற,நினைக்கின்ற எல்லோருடைய முகத்திலும் கரியைப் பூசுவதற்காகவாவது நான் சாதித்தே ஆகவேண்டும்.

ஒரு வாய்ப்பு..ஒரேயொரு வாய்ப்பு..,கிடைத்தால் போதும்.தன்னை நிரூபித்துக் கொள்ள முடியும். ரசிகனுக்கு முன்னுள்ள பெரிய திரையில் பெயர் வருவதற்காக,திரைக்குப் பின் ஆயிரமாயிரம் முயற்சிகளை செய்யத்தான் வேண்டும்.வாழ்வதற்காக சாகவும் துணிவதுதானே முயற்சிக்கு அழகு..!


“தம்பி..போயிட்டு வர்றேன்..” வி.எம்.வியின் குரலைக் கேட்டு,சடக்கென நினைவுகளிலிருந்து விடுபட்டான் பரத்.விடைபெற்றபடி அவர் போய்க் கொண்டிருந்தார்.


டி.ஜே.இப்போது சற்று சுதந்திரமாகக் கால்களைத் தூக்கி எதிர் நாற்காலியில் போட்டுக் கொண்டு,மீண்டும் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார்.டேய்..பரத்..புரெட்யூசர் சொன்னதைக் கேட்டியா..? கிளைமாக்ஸ் த்ரில்லா இருக்கணுமாம்.பினிஷிங் கார்டு போடும்போது கொஞ்சம் காமெடி டச்சோட இருந்தா நல்லாருக்குமாம்.என்ன பண்ணலாம்..?”


“பண்ணிறலாம் சார்..நாளைக்குள்ளே புது சீனைப் புடிச்சர்லாம் சார்..” என்றான் பரத்.


இரண்டுவருடங்கள் கழிந்திருந்தது.டி.ஜே.வின் தயாரிப்பில் எடுக்கப்பட்டிருந்த புதிய திரைப்படத்தின் கட் அவுட்டுகள், போஸ்டர்களில் இயக்குனர் பரத்குமார் என்ற எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தன. “டி.ஜே.சார்..வந்து என்னைப் பெறாத தகப்பன் மாதிரி.அவர்கிட்டே வேலை பார்த்த அனுபவம்தான் என்னை ஒரு இயக்குனரா வளர்த்துவிட்டுச்சு..” என்று பிரபல தொலைக்காட்சியொன்றில் பரத்குமாரின் பேட்டியை,வீட்டில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருந்தார் டி.ஜே. “இதுக்கொண்ணும் கொறச்சலில்லே..” என்று அவர் கன்னத்தில் ‘நங’; கென்று இடித்தபடி காபியைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள் அவரின் மனைவி.

----------


வெளியே தெரியாதவன்..!

--------------------------------------


சரியான நேரங்களில்

நான் தட்டிய பலகையும்

இக்கைத்தட்டலுக்கு

காரணமென்ற சிறு

கர்வமுண்டு.


நீங்கள் உருகி உருகி

இரசிக்கும் முத்தக்காட்சிக்கு

நாயகியின் உதட்டுச்சாய

விகிதத்தை எத்தனைமுறை

சரிபார்த்திருப்பேன்.


பிரபல நடிகர் செய்யும்

தவறுக்கு சினம் உறுஞ்சும்

பஞ்சாக இருந்திருக்கிறேன்.


அரைகுறை ஆடையோடு

அவள் பழரசம் அருந்தும்வரை

வசனக்காகிதத்தில் இருந்து

கவனம் சிதறாமல்

என்னாலிருக்க

முடிந்திருக்கிறது.


என் விழிகளாடா

பென்டுலம் தான்

தொடர்ப்பிழையில்லா

இக்காட்சிகள்.


திருட்டு எனக்கு

பழகிப்போன

இருட்டு.


உறவுகளுக்கு

உருப்படாதவன்.


காதலியின்

எப்போ சாதிப்ப என்ற

வதைப்புக்குச் சொந்தக்காரன்.


அப்பாவின் போதும்

வேறு வேலை பார்

இதை விட்டுவிடு என்பதில்

பலமுறை தப்பித்தவன்.


எல்லாம் தாண்டி

முட்டைக்கருவாய்

கனவுளை அடைகாக்கிறேன்.


கொட்டையெழுத்தில்

ஒருநாள் என் பெயர்

திரையில் தோன்றவே.


ஆம்

நான் வெளியே

தெரியாதவன்.


எனக்கு

உதவி இயக்குனர்

என்று பெயர்..


--கனா காண்பவன்

--------------------

5 views0 comments

Comments


bottom of page