மருதாயி………………………………..
காலை ஏழு மணி.
ஒட்டுமொத்த கிராமமும் மருதாயி வீட்டு வாசலில் கூடியிருந்தது.
முப்பது வயது நிரம்பிய கந்தப்பனின் திடீர் சாவு ஊருக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆண்கள் ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தனர்.
பெண்கள் எல்லோரும் மருதாயியை சுற்றிக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க.........
மருதாயியின் ஆறு மாதக் குழந்தை அவளது மடியில் தூங்கிக் கொண்டிருந்தது. அவளது ஏழு வயது மகன் என்ன செய்வது என்று தெரியாமல் அவளருகே விழித்தபடி உட்கார்ந்திருந்தான். தன்னைச் சுற்றி நடப்பவை பற்றி அறியாமல் திகைத்துப் போய், மருதாயி கந்தப்பனின் சடலத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
எலேய் மருதாயி வாய் விட்டு அழுதிடுறீ.... உன்னைய இப்படி சின்னஞ்ச்சிறு வயசில ரெண்டு புள்ளைகளையும் நிர்கதியாய் விட்டுட்டு போய்ட்டானே பாவிப்பய......ஒனக்கு அந்த அய்யனாரு தான் பதில் சொல்லணும்..... அம்மா மருதாயி.... என்று அன்னம்மாக்கா மருதாயியை இழுத்து அணைத்துக் கொண்டு அழுதாள்.....
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. எல்லோருக்கும் பசியெடுக்க துவங்கியது.
ஆண்கள் மெதுவாய் நகர ஆரம்பித்தனர். சிலர் டீ குடிக்க டீக்கடைப் பக்கம் ஒதுங்கினர். பலர் சாராயக் கடைப்பக்கம் தேடிப் போனார்கள்.
கந்தப்பனின் நெருங்கிய நட்பு மல்லன் , போதை தலைக்கேறி உளறிக் கொண்டிருந்தான்.
‘ நா அப்பவே சொன்னேன். விலை மலிவா இருக்குனு அடுத்தூருக்குப் போய் சாராயம் போட வேண்டாம். கள்ளமா இருக்குண்டானு.....கேக்கலையே...... எனக்கு தெரியாம போய் குடிச்சிட்டு இப்போ செத்துக் கிடக்கானே........
கூட்டம் அவனை சூழ்ந்துக் கொண்டது. கூட்டத்தில் பெரியவர் ஒருவர், “ எலேய் மல்லா, எழும்புடா....அவனை உலுக்கி எடுத்தார். அதற்குள் ஒருவன் அவன் முகத்தில் சொம்புத் தண்ணீரை அடித்து, மல்லனை ஒரு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தான். என்னடா ஆச்சு? எங்கன போய் குடிச்சீங்க ரெண்டு பேரும்?.... சொல்லு.... உலுக்கினார்.
மல்லன் பேசும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ இல்லை.....சுதாரித்துக் கொண்டு,” ‘நா போகலை... எனக்குத் தெரியாது. னேத்து அந்தியில வேலை முடிச்சு திரும்பையில, கந்தப்பன் அடுத்தூரில சாராயம் கம்மி விலைக்கு விக்கராங்களாம் வாரீயானு கேட்டான்...
வேணாண்டா அந்த ஊரில நிறைய கள்ளச்சாராயம் காய்ச்சுறாங்க.. இப்போ கையில காசும் இல்ல பொறவு பாக்கலாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டேன். எனக்குத் தெரியாம அவன் பொறவு போயி அடிச்சிருப்பான் போல.. நான் நெனச்ச மாதிரியெ கள்ளத்தை குடிச்சுட்டு இப்பொ மல்லாந்துட்டானே... அழுது அலற்றிக்கொண்டிருந்தான்...
சாராயமே அவனுக்கு எமனாகியது என்று தெலிவான பின் மக்கள் கலைய ஆரம்பித்தனர்.
மருதாயிக்கு எதுவுமே காதில் விழவில்லை... இரண்டு நாட்களாயிற்று முழுசாய் அவள் சாப்பிட்டு...
எவ்வளவு மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை... கந்தப்பன் எவ்வளவு ஆசையாக இருந்தான் அவளிடம்.. எல்லாம் போயிற்று அவன் சாராயத்திற்கு அடிமையானப்பின்...
செலவு போக மருதாயியே அவன் கையில் காசை திணித்து, “ மீன் குழம்பு வைக்கிறேன், கொஞ்சம் போல ஊத்திட்டு வாயா... உடம்பு அலுப்பு தீர..” என்று எத்தனை முறை கொஞ்சியிருக்கிறாள்... அப்போதெல்லம் மறுத்திருக்கிறான்... பெருமைப்பட்டிருக்கிறாள்..
எந்த நேரத்தில் மல்லனோடு சேர்ந்தானோ அன்றைக்கே அவள் குடி கெட்டது. வேலைக்கு ஒழுங்காக போகாமல், காசும் வீட்டிற்கு கொடுக்காமல், இருக்கும் தட்டுமுட்டு சாமான்களை கூட விட்டு வைக்காமல் விற்று குடித்தான். தாங்க முடியாமல் மருதாயி வேலைக்குப் போக துவங்கினாள். அவள் கொண்டு வந்த கூலியில் அரை வயிற்று கஞ்சிக்கும் பெரியவன் படிப்புக்கும் போக கந்தப்பனின் குடிக்கும் ஒதுக்கி வைக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது தான் இந்த சாவு.
ஏற்றி வைத்து விட்ட ஊதுபத்தியின் வாசமும், அவன் மீது சார்த்தியிருந்த துளுக்கஞ்சாமந்தி மாலைகளின் நெடியும் சேர்ந்து காலியாக இருந்த மருதாயியின் வயிற்றை புரட்டிக் கொண்டு வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது.
மெதுவாய் குழந்தையை அங்கம்மாவிடம் கிடத்திவிட்டு வீட்டிற்குள் செல்ல எழுந்தாள். அவள் என்ன செய்ய போகிறாளோ என்று அங்கம்மா கேள்வியாய் பார்க்க.. “ தண்ணி குடிச்சுட்டு வரென் ஆத்தா”, என்று உள்ளே போனாள்.
வீட்டிற்குள் நுழைந்த அவளுக்கு இன்னும் அதிகமாய் குமட்டியது.அடுப்படியில் இரைந்து கிடந்த முட்டைகளும், மீன் குழம்பும், நொச நொசத்துப் போன சோறும் நாற்றமடித்தது... தொடப்பத்தை எடுத்து ஒரு சேர கூட்டி மற்ற குப்பைகளோடு அவற்றையும் கொல்லைப் புறத்தில் தூக்கி எறிந்தாள்.
கந்தப்பனுக்கு எப்போது குடித்துவிட்டு வந்தாலும் காரசாரமாக மீன் குழம்பு கட்டாயமாக வேண்டும். காசு இல்லாமல் இதெல்லாம் எப்படி வரும் என்று யோசிக்கவே மாட்டான்..... அவன் கேட்டது இல்லா விட்டால் மருதாயியை அடித்து நொறுக்குவான்....
அப்பொதெல்லாம் கூட அவளுக்கு நம்பிக்கை இவன் திருந்திவிடுவான், நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று.....
நேற்று காலை, “ செந்திலுக்கு நோட்டு வாங்கியாரணும்னு அய்யாகிட்டே இருந்து கடனா இருபது ரூவா வாங்கியாந்து, இருக்கேன்...... சாயங்காலம் வாரப்போ புள்லைக்கு மறக்காம நோட்டு வாங்கியாந்திடு”......அவனிடம் கொடுத்தபோது இருந்த நம்பிக்கை இரவு அவன் அந்த காசில் குடித்துவிட்டு வந்த போது பொடிபொடியாகிப் போனது..........
ஒரு வாரமாய் நோட்டு கேட்டு கேட்டு இன்று அப்பா எப்படியும் வாங்கிட்டு வந்திடுவார் என்று நிம்மதியாய் தூங்கிக் கொண்டு இருக்கும் மகனை வேதனையோடு பார்த்தாள்.....
‘ஏய்யா....நோட்டு வாங்கியாரச் சொன்னேனே.... வாங்கியாந்தியா? நோட்டுக்கான காசு போன இடம் தெரிந்ததால் கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.....
ஆமா ....பெரீ....ய்ய கலெக்டரு படிப்பு.....போடி சர்தான்......கேக்க வந்ந் துட்டா...... சோத்தை பொடுறீ........ கேள்வி கேக்கறா பாரு.......பெரிய இவளாட்டம்........... ‘, குத்துகாலிட்டு உட்கார்ந்து பேசுபவனை பார்க்க பார்க்க மருதாயின் வயிறு பற்றி எரிந்தது......
அய்யோ ....புள்ளை மேல அடிச்சு சத்தியம் செஞ்சானே........காலைல புறப்படும் போது கூட நம்ம புள்ளையை எப்படியாவது படிக்கவச்சிடுவேனு புரட்டி புரட்டி பேசினானே........ரொம்ப நாளைக்கு பொறவு காமாட்சியக்கா கிட்டே கடன் வாங்கி முட்டையும் மீனும் ஆக்கி வெச்சனே!... இப்படி ஏமத்திட்டானே...... பாவி....அவனை பார்க்க பார்க்க ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது....... அவனை அப்படியே முடியை பிடித்து சுவற்றில் அடிக்க மாட்டோமா என்றிருந்தது அவளுக்கு...... ஆனால் இவனை என்ன செய்ய முடியும் இவளால்.... உடம்பிலும், மனதிலும் தெம்பில்லை.......
என்னடி....லுக்கு விட்டுட்டு நிக்கற?.....சோத்தை எடுத்து வைடீ.....’,அருகில் இருந்த தலைக்.கட்டையை எடுத்து அவள் மீது வீசினான்......அது குறி தப்பி தூங்கிக் கொண்டிருந்த மகன் மேல் விழுந்தது........
அழக்கூட முடியாமல் விக்கித்துப் போய் எழுந்து உட்கார்ந்தான் மகன். அப்பாவை பார்த்தவுடன் அடி விழுந்த இடத்தை தேய்த்துக் கொண்டே ,’அப்பா........எனக்கு நோட்டு வாங்கியாந்தியாப்பா?.......ஆவலோடு கேட்டான். நெற்றியிலிருந்து இரத்தம் கோடாய் வழியத் துவங்கியது...
மருதாயி பதறியப்படி தன் முந்தானையால் அழுத்தி, கட்டுவதற்கு துணி கிழிசலைத் தேடினாள்.
அப்போது தான் அந்த மருந்து டப்பாவை பார்த்தாள். பண்ணை வீட்டிலிருந்து தோட்டத்திற்கு பூச்சிகளுக்கு அடித்து ,மிச்சமிருந்த ஒரு மருந்து டப்பாவை தன் வீட்டு கீரைச் செடிகளுக்கு கேட்டு வாங்கி, போட நேரமில்லாமல், மூலையில் வைத்திருந்தாள். எழுந்துப் போய் எடுத்து குலுக்கிப் பார்த்தாள்.
ஒரு முடிவோடு, ‘தம்பி, நாளைக்கும் நீ பள்ளிக் கூடத்துக்கு போகவேணாம். உங்க டீச்சரு வைய மாட்டாங்க.....பேசாம படுத்து தூங்கு....’, என்றபடி அந்த டப்பாவில் எஞ்சியிருந்த மருந்தை நிதானமாய் மீன் குழம்பில் கலக்கி, தட்டில் சோறு போட்டு குழ்ம்பை ஊற்றி அவனிடம் நீட்டினாள்...
காலியான டப்பாவை கொல்லைப் புறத்தில் தூக்கி எறிந்தாள்.......
கந்தப்பன் தனக்கு கடைசி சாப்பாடு என்பதாலோ என்னவோ, அவசர அவசரமாய் சாப்பிட்டான். அவனை வெறுப்போட பார்த்தபடியே, குழந்தையிடம் வந்து உட்கார்ந்தாள்.........
அவன் சாவதுகூட தெரிந்துக் கொள்ளாமல் மெல்ல செத்துப் போனான்............
இனிமே யாரு வரணும்?......எல்லாரும் வந்திட்டாங்க.........தாயீ.......மருதாயீ....... எடுத்திடலாம்........சாயங்காலமாவது கோயிலை திறக்கணும்னு பூசாரி சொல்றாரு........
மருதாயியை கூப்பிடுங்கம்மா..............இனி மருதாயிக்கு யாரு இருக்கா? நாம தான் பார்க்கணும்......ம்.......ஆக வேண்டியதை பார்ப்போம்.......... என்கிற பேச்சுக் குரல்கள் கேட்க , மருதாயி தன்ணீர் குடிக்கவும் மறந்து, தன் வாழ்விற்கும், மகனின் பசிப்புக்கும் எமனாக வந்த குடியை நினைத்து ஓவென்று அலறியபடியே வெளியே ஓடி வந்தாள்.
திடீரென்று அலறியபடி ஒடி வந்த மருதாயியோடு, மற்ற பெண்களும் சேர்ந்துக் கொண்டனர்.......
Comments