top of page

தன் மகளுக்கான அப்பாவின் கவிதை!

Writer's picture: tamilpettai tamilpettai

Updated: Dec 15, 2020


பாக்களிலிலே ரதியாகிப்

பிறந்தவளே மகளே...

பூக்களெலாம் தோற்கடித்துப்

பூத்தவளே மகளே...!


................... நீ ...................


பூ விரலால் பூமி தொட்டுத்

தவழ்ந்து வரும் போதும் – உன்

பொன் முகத்தால் நீ மலர்ந்து

புன்னகைக்கும் போதும்...


அன்பென்ற ஆறு பூத்து

அள்ளுதடி வெள்ளம் – என்

ஐம்புலனும் ஈறு தாண்டித்

தின்னுதடி வெல்லம் !

==

கீச்சு மொழிப் பேச்செடுத்துக்

கிறங்க வைக்கும் போதும்...

ஈச்சம் பழம் கொட்டுவதாய்

எச்சில் சொட்டும் போதும்...


மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே

நிரந்தரமாய் தங்கும் – என்

கண்மணியாள் கதைப் படித்தே

காலத்தினைத் தள்ளும் !

==

பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்

கோலமிடும் போதும் – உன்

பிஞ்சுக் கரம் என்னைத் தீண்டித்

தாளமிடும் போதும்....


நாளமெல்லாம் தேன் வழிந்து

நனைக்குதடி என்னை – என்

ஞாலமெல்லாம் ஆர்பரித்துக்

கொஞ்சுதடி உன்னை !

==

பத்து மாதம் சுமந்தவளின்

மடியுறங்கும் போதும் – உனைப்

பைத்தியமாய்ச் சுமப்பவனின்

மார்புறங்கும் போதும்...


சுற்றும் பூமி சற்று நின்று

உற்றுப் பார்க்கும் உன்னை – தான்

பெற்றுக் கொண்ட சொத்து என

தட்டிக் கொள்ளும் நெஞ்சை !

==

அடம் பிடித்துச் சண்டையிட்டு

அன்னம் மறுக்கும் போதும் - பெரு

சினம் வெடித்துச் சீற்றம் கொண்டு

கன்னம் சிவக்கும் போதும்...


வீறு கொண்ட பாரதியின்

வீரம் தெறிக்கு முன்னில் – அடி

ஊறு வந்தால் வேரறுக்கும்

தீரம் உந்தன் கண்ணில் !

==

சொற்களற்ற சொற்களினால்

கவி படிக்கும் போதும் – உன்

பற்களற்ற வாய் மலர்ந்து

தேன் வடிக்கும் போதும்...


கம்பன் உந்தன் கால் பிடித்துக்

கெஞ்சுவதாய் கண்டேன் – பெரும்

கர்வம் கொண்டு மார்புத் தட்டி

மீசை முறுக்கிக் கொண்டேன் !

==

நரை விழுந்து தள்ளாடி

நான் தளரும் போதும்....

தரை விழுந்து தடுமாறி

நான் எழும்பும் போதும்....


திரைக் கொண்ட கடலொப்ப

அலையடிக்கும் நெஞ்சில்- ஒரு

நரை யற்று, அன்னையுடன்

காப்பே னுனை மண்ணில் !

47 views0 comments

Comments


bottom of page