பிரிந்துவிட்ட காதலர்களாய்
இரவும் பகலும்!
அழுது சிவந்த கண்களே,
அந்தி செவ்வானமாய்,
நிலவில் மை தொட்டு
கரு வான காகிதத்தில்
கடிதமொன்று எழுதத் தொடங்கியது இரவு!
சிந்தித்து எழுதுகையில்
சிதறிய மைத்துளிகளே
நட்சத்திரங்களாய்!
விடிய விடிய யோசித்தும்
விளங்க வைக்கும்
வார்த்தை ஏதும் சிக்காததால்
இரவு வடித்த கண்ணீரே
பனித்துளிகளாய்!!
சிப்பிக்குள் விழுந்த
மழைத் துளி முத்தாவது போல்
இரவு கண்ணீரின்
ஒரு துளி மட்டும்
வித்தாகிப் பின் விருட்சமானது!!
இரவின் புலம்பல்களை எல்லாம் - அது
பூக்களாய் பூக்கச்செய்தது
பகல் வந்து படிப்பதற்கு!!
பகல் வந்து படித்துவிட்டு
போனதே தெரியாமல்
மீண்டும்
மீண்டும்
மடல் எழுதி கொண்டே இருக்கிறது
இரவு,
மை தீர, தீர
நிரப்பி,நிரப்பி
வளர்பிறை,
தேய்பிறைகளாய்!!
Comments